பேஸ்புக்... என் வாழ்வின்,
என் தூக்கத்தின் பெரும் பகுதியை ஆக்கிரமித்து கொண்டிருப்பதை கண்டும் காணாமல், உள்ளே
பூஜை அறையில் இருந்து எழும்பும் அதிகாலை சுப்ரபாதம் தாண்டி இனிக்கும் என் அம்மாவின்
திட்டுக்களை ரசித்து கொண்டே.., ஜன்னல் வழி எட்டி பார்த்தேன்..! எனக்கு மிக பிடித்த
கருநீல வண்ணம் களைந்து, ஏதோ கொஞ்சம் சுமாராக பிடித்த இளம் நீல நிறம் கொண்ட உடையை உடுத்த
தயாராகும் வானத்தை பார்த்ததும்.., உடனே என் கண்கள் கடிகாரத்தை தேடி திடுக்கிட்டது..!!
மணி, 6 -ஐ தாண்டி 7 -ஐ நோக்கி
எழுபது கிலோமீட்டர் வேகத்தில் விரைந்துகொண்டிருந்தது..! "ச்ச..! இந்த மாதிரி என்னைக்காவது
இந்த பாழா போன நேரம் இந்த வெள்ளைக்காரன்/காரி கூட டெலிபோன்ல மொக்கை போடும் போது இவ்வளவு
வேகமா போகுதா..! வீட்ல இருந்த மட்டும் எப்புடியோ நேரம் வேகமா போகுது" என்று அன்றாட
பாட்டை தொடங்கினேன்..!!
"அக்காஆஆஆஆஆஆ.... கீரைஈஈஈஈஈஈஈஈஈஈ....!!"
என்று ஒரு கீச்சு குரலின் அலறல் கேட்டு எழுந்தேன்..! "அவன்கிட்ட ரெண்டு கட்டு
வாங்கிகிட்டு நாளைக்கு முருங்கை கீரை கிடைத்தால், கொண்டு வரச்சொல்..!" எனகூறி
விட்டு அதிகாலை பூஜையில் ஐக்கியம் ஆனாள் அம்மா..!
வாசல் வந்ததும்.. அங்கே ஒரு
பத்து வயது பெறுமானமுள்ள ஒரு சிறுவன் நின்று கொண்டு இருந்தான்..!!
மிகச்சிறிய உருவம்..! ஒல்லியான
உடல் அமைப்பு..! அவன் தலை முடி நன்கு காய்ந்து, வறண்டு இருந்தது..! எப்படியும் வாரக்கணக்கில்
எண்ணெய் இடப்படாமல் லேசாக செம்பட்டை தட்டி இருந்த தலைமுடியுடன் நின்றிருந்தான்..! பெயரளவில்
ஒரு சட்டை அணிந்திருந்தான், அவன் அரைக்கால் சட்டை அவனது ஒல்லியான இடுப்பில் நிற்கமாட்டேன்
என கழண்டுவிட பார்த்துக்கொண்டிருந்தது..! அதை தடித்த முருங்கைக்காய் போன்ற ஒரு கையால்
பிடித்து நிறுத்து இருந்தான். மேலும்.. இடுப்பில் நிற்காத அவன் கால்சட்டையை.., புதுவிதமாக..ஒரு
நைலான் கயிறு கொண்டு இடுப்பில் கட்டி இருந்தான்..! பார்ப்பதற்கு பழைய காலத்து துணியால்
நெய்யப்பட்ட பொம்மை போல் காட்சி அளித்தான்..!
என்னை பார்த்ததும் லேசாக சிரிக்கலாமா
வேண்டாமா என்று யோசித்து கொண்டே சிரித்தான்..!
நான் அவனிடம் இரண்டு கட்டு
கீரை வாங்கி கொண்டு அவன் கேட்ட இருபது ரூபாய்களை அவனிடம் நீட்டினேன்..! அதை வாங்கிகொண்டு
திரும்பி செல்ல தான் கொண்டுவந்த மீதமுள்ள கீரைகட்டுகளை சுமக்க தயாரானான்..!
அவனிடம்.."த்தம்பி...!
உன் பேரென்ன?" என்று கேட்டேன்..! அதற்கு.. "மன்சூர்..ண்ணே " என்றான்..!
என்ன வயசுடா தம்பி உனக்கு என்றேன்..! அதற்கு எங்க அம்மாக்கு தான்னே தெரியும்.."
என்று லேசாக சிரித்து கொண்டே சொன்னான்..!
"சரி படிக்கிரியாடா மன்சூர்..,
எந்த வகுப்பு படிக்கிற?" என்று கேட்டேன்..! இல்லன்னே..இப்போ தான் ஊர்லேந்து கூடியாந்தாங்க..!
அப்பா செத்து போயிட்டாரு.. எங்க மாமா இங்க கடை வச்சிருக்காரு..! அவரு கடையில தான் வேலை
பாக்குறேன், அம்மாவும் அக்காவும் இங்க வீடு வேலை செய்றாங்க" னு வேக வேகமா சொல்லி
முடித்தான்..!
சொல்லி முடித்த வேகத்தில்..,
கீழே இருந்த கீரைக்கட்டுகளை தூக்கசென்றான்..! அவன் கையில் ஏதோ தீப்புண் யாரோ சூடு வைத்தது
போல இருந்தது..!"என்னடா மன்சூரு..? கையில என்ன புண்ணு? " என்று கேட்டேன்..!
ஒரு நொடி தன் கையை பார்த்த அந்த பிஞ்சு.. "அதுன்னே.. நைட் பக்கத்துக்கு வீட்டு
அண்ணன் பில்லா படம் சீடீ போட்டுச்சு.. நானும் புல் -ஆ பார்த்தேன்.. காலைல மாமா கடைக்கு
போகும் போது எழுப்பினாரு.. நான் தூங்கிகிட்டே இருந்ததுல.. பீடியால சுட்டுபுட்டாருண்ணே..!"
என்று சொன்னான்..!
அவன் சொல்லும் போது.. அவன்
கருத்த முகம்..சிவந்து வீங்குவதையும், கண்கள் லேசாக கலங்குவதையும் பார்த்தேன்..!
அவனிடம், "ஏன்டா? அம்மா
மாமாகிட்ட எதுவும் கேக்கலியா? " என்று கேட்டேன்..!
"இல்லைனே..அம்மா காலையிலேயே
வீட்டு வேலை செய்ய போய்டுச்சு..! இனி மத்தியானம் மூணு மணிக்கு தான் வரும்..! அப்படியே
அம்மாகிட்ட சொன்னா.. அம்மா அழத்தான் செய்யும்..! இல்லேன்னா எதாச்சும் கேட்டா மாமா எங்கள
ஊருக்கே விரட்டி விட்ருவாரு" என்றான்.
அரை நிமிடம் என்ன செய்வது
என்றே தெரியவில்லை..! எதாச்சும் சாப்டியாடா?? என்று கேட்டதற்கு.."இல்லைனே, கீரையெல்லாம்
வித்துட்டு கடைக்கு போக மணி ஏழரை எட்டாயிடும். அப்புறம் ஒம்பது மணிக்கு மாமா இட்லியும்,
டீயும் வாங்கித்தருவார்..!
சரி டா.. இப்போ எதாச்சும்
சாப்பிடுறியா என்று கேட்டேன்..! இல்லைனே அதெல்லாம் வேணாம்னே" என்று குழந்தைகளுக்கே
உரித்தான ஒரு கூச்சம் கலந்த சிரிப்புடன் சொன்னான்..! அவன் சிரிப்பு.. எனக்கு ஏதோ வலியை
தந்தது..!! தன் வலியையும், தன் பசியையும் தாங்கிக்கொண்டு, வாழ்கை பரிசளித்த பொறுப்புகளை
தான் கொண்டு வந்த கீரைக்கட்டுகளுடன் சேர்த்து சுமக்கும் அந்த சிறுவன் எனக்குள் பெரும்
வலியை ஏற்படுத்தினான்..!
என்ன தோன்றியதோ தெரியவில்லை
எனக்கு, உடனே "இருடா..இதோ வரேன்..!" சொல்லிட்டு வீட்டுக்குள்ள வேகமா போனேன்..!
நேரா அம்மாகிட்ட போய் எதாச்சும் சாப்பிட இருக்கா?" என்று கேட்டேன்..! என்னை ஆச்சர்யத்துடன்
பார்த்த அம்மா.. "இல்லையேடா.. நூடுல்ஸ் செஞ்சு தரவா..? சாப்பிடுறியா?" என
கேட்டாள்..!
நான், "இல்லை வேண்டாம்!" என்று சொல்லி விட்டு
பிரிட்ஜ் -இல் இருந்த வாழைபழத்தை பார்த்தேன்..! "அம்மா, இந்த வாழை பழம்..???"
என்று கேட்பதற்குள்.."டேய்.. அது சாமிக்கு பூஜை செய்ய வச்சிருக்கேன்..கொஞ்சம்
இரு.. ரொம்ப பசிச்சுதுனா..நூடுல்ஸ் செஞ்சுதறேன்"...னு சொன்னாள்..!
அவள் அங்கிருந்து வருவதற்குள்
இரண்டு பழங்களை பறித்து அவனிடம் நீட்டினேன்.. அதற்கு "இல்லன்னே.. வேணாம்னே..!"
என்று மறுபடியும் கூச்சத்துடன் மறுத்தான்..! "டேய்.. பிடிடா !" என்று அவன்
கையில் திணித்தேன். "தேங்க்ஸ்னே" என்று தன் கால்சட்டைப்பையில் அப்பழங்களை
செருகினான்..!
"ஏன்டா! சாப்பிடலையா..?"
என்று கேட்டதற்கு.."இல்லைனே, கடைக்கு போற வழில தான் அக்க வேலை செய்ற வீடு இருக்கு..
அங்க அக்கா கிட்ட ஒன்னு குடுத்துடுவேன்" என்றான்..! இம்முறை யோசிக்கக்கூட தோன்றாமல்,
அங்கிருந்த மேலும் ஐந்தாறு பழங்களை ஒரு பிளாஸ்டிக் பையில் போட்டு அவனிடம் நீட்டினேன்..!
அவன் முழித்தான்..!
"இல்லைடா..! முடிந்தால்..,
உன் அக்காவிடம் கொடுத்து உன் அம்மாவிற்கும் கொடுக்க சொல்" என்று சொன்னேன்..! இம்முறை
கூச்சம் ஏதும் அறியாது.. முகம் முழுதும் மலர்ச்சியுடன் வாங்கிக்கொண்டான்..! "ரொம்ப
தாங்க்ஸ்னே.. மணியாச்சு.. நான் போலைனா மாமா தேடிட்டு வந்துடுவாரு" னு கிளம்பியவனிடம்..
மேலும் பத்து ருபாய் நோட்டு ஒன்றை கொடுத்தேன்..!
திணறிய அவன்.. "எதுக்குஅண்ணே
?" என்று கேட்டான்.
"நீ எதாச்சும் வாங்கி
சாப்பிடுடா.." என்று கூறினேன்..! அதற்கு அவன் "இல்லைனே.. எங்க மாமா கண்டுபுடிச்சாருன்னா..
என்னடா? கடை கல்லாவிலே திருடினியா னு கேப்பாரு. அதனால காசெல்லாம் வேணாம்னே.."
என்று சொன்னான்.!
கலங்கி போனேன்..!
சரி மன்சூர்..! அப்படி என்றால்
இன்னும் இரண்டு கட்டு கீரை கொடு என்று மேலும் ஒரு பத்து ரூபாயை அவனிடம் கொடுத்தேன்..
வாங்கிக்கொண்டு..சந்தோசமாக "தாங்க்ஸ்னே.. நான் நாளைக்கு வரேன்..லேட் ஆச்சு"
னு ..டாட்டா சொல்லி கிளம்பினான்..!
கை நிறைய கீரை கட்டுக்களுடன்..,
மனம் நிறைய நீர்க்கட்டுகளுடன்..உள்ளே நுழைந்த என்னை பார்த்த அம்மா "என்னடா! இது??
ரெண்டு கட்டு தானே வாங்க சொன்னேன். எதுக்கு நாலு கட்டு?? என்று கேட்டாள். குழம்பு,
பொரியல், கூட்டு எதாச்சும் செய்யுங்கம்மா. அப்புறம்.. நாளைல இருந்து தினமும் கீரை வாங்குங்க"
என்று சொல்லிவிட்டு கணினி அருகே வந்தமர்ந்தேன்..!
சிறிது நேரம் கழித்து வேகமாக
வந்த அம்மா "அங்க பிரிட்ஜ்-ல இருந்த வாழைபழத்த என்னடா பண்ண? நான் சாமிக்கு பூஜை பன்ன வாங்கி வச்சிருந்தேன்..
உனக்கு தான் நான் நூடுல்ஸ் செஞ்சு தரேன்னு சொன்னேன்ல..! அதுக்குள்ளே எல்லா பழத்தையும்
சாப்டியா? சாமிய விட அப்படி என்ன உனக்கு பசி??" என்று செல்லமாக கோபப்பட்டாள்.
அம்மா என்னிடம் கேட்ட "சாமியை
விட உனக்கென்ன அப்படி ஒரு பசி" என்ற கேள்விக்கு
என்னிடம் பதில் இல்லை! இதைத்தவிர...
“காரணமின்றி முதலாளி சூடுவைத்தபோதும்,
மௌனமாய் சிரிக்கும் சிறுவனின் முகத்தில் அப்பட்டமாய் தெரிகிறது, அவன் குடும்பத்து வறுமை!
அதை விட அந்த நேரத்தில் கடவுள் எனக்கு பெரிதாக படவில்லை!”
No comments:
Post a Comment